ஆண்டாள் அருளிய திருப்பாவை – 29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேயாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
பொருள்:
கோவிந்தா! மிகுந்த விடியற்காலை வேளையிலே அடியார்களுடன் கூட்டமாகச் சேர்ந்து வந்து உன்னை சேவித்து, உனது பொற்பாதங்களையே போற்றிப் பாடுகிறோம், அதன் காரணத்தைக் கூறுகிறோம், கேள்.
பசுக்களை மேய்த்து உண்ணும் சாதாரண இடையர் குலத்தில் எங்களுடன் சேர்ந்து பிறந்த நீ, நாங்கள் உனக்குச் செய்யும் சாதாரண பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடாது, பெருமாளே! இன்று உன் அருளை பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இன்னும் எத்தனை எத்தனை பிறவிகளை நாங்கள் எடுத்தாலும் உனக்கு நெருங்கியவராக, உனது உறவினராக நாங்கள் விளங்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் சேவை செய்து வாழ வேண்டும். மற்றபடி வேறெந்த விருப்பமும் இதற்குத் தடையாகத் தோன்றிடாது மற்ற ஆசைகளை எம்மிடமிருந்து நீக்கி அருள்புரிவாய் பரந்தாமா!
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்
பொருள்:
எங்கள் பெருமானே! “உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்ற சொல் பழமையானது. அதைப் புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்குத் தோன்றியுள்ளது. எங்களின் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும் இறைவா! எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கல்லாது வேறு எவருக்கும் எந்த தொண்டும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. எங்கள் தலைவனே! எங்களுக்கு இவ்வண்ணம் அருள் புரிந்தாயானால், சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?
மிக நல்ல முயற்சி, நன்றாக எழுதுகிறீர்கள்
ReplyDeleteபாராட்டுக்கள்
தேவ்
மிக்க நன்றி :-)))
ReplyDeleteவர்தினி
Nice reading this.
ReplyDelete@Raji Mam: Thank you very much :-)))
ReplyDelete