Sunday, January 2, 2011

திருப்பாவை - 18, திருவெம்பாவை - 8

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
மதயானை போன்ற நடையுடையவனும், போரில் பகைவரைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமையுடையவனுமாகிய நந்தகோபாலனின் மருமகளே நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலுடையவளே! கதவைத் திறவாய்! பொழுது விடிந்து கோழிகள் பலவும் கூவுகின்றன. செண்பகக் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தல் மீது அமர்ந்து பல குயில்கள் கீதம் பாடுகின்றன. மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மெல்லிய விரல்களை உடையவளே! உன் கணவன் கண்ணனின் திருநாமங்களை உன்னுடன் சேர்ந்து போற்றிப் பாட வந்துள்ளோம். செந்தாமரையை ஒத்த உனது கரங்களில் வளையல்கள் கலகலவென ஒலியெழுப்ப மகிழ்ச்சியுடன் வந்து கதவை திறப்பாயாக!



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
நற்காலைப் பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; வாத்தியங்களின் ஏழிசை நாதம் இசைக்க, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. ஒப்பற்ற மேலான கருணையுடைய சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.

அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக்காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

2 comments:

  1. மிக அருமையான பாடல்கள். உடையவர் ராமானுஜர் தினம் பிட்சை வாங்கி சாப்பிடுவாராம். இந்த பதினெட்டால் நாளில் ‘உந்து மதகளிற்றன்’ பாடல் பாடிக்கொண்டே ஒரு வீட்டின் முன் வந்து நிற்கிறார். அப்போது அவர் வாயில் ’கந்தம் கமழும் குழலி கடை திறவாய்’ என்ற வரிகள் வந்தவுடன் அந்த வீட்டின் வெளிவாயிலில் ஒரு பெண் அரிசியுடன் நிற்க, இவள் ஆண்டாள்தானோ என்னவோ என மயங்கி சாஷ்டாங்கமாக அந்தப் பெண்ணுக்கு நமஸ்காரம் செய்கிறார் என ராமானுச சரிதம் சொல்கிறது..

    ReplyDelete
  2. ஆஹா! அவரது பக்தியைத் தான் என்னவென்று சொல்வது! சாதாரண பெண்ணிலும் இறைவனைக் கண்டதால் தான் அவர் மகான் அல்லவா! சிறந்த இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

    நன்றி
    வர்தினி

    ReplyDelete