ஆண்டாள் அருளிய திருப்பாவை – 27
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
பொருள்:
உன்னுடன் இணங்காதவரையும் இணங்க வைத்து வணங்க வைக்கும் குணக்குன்றே கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் நோன்பு நோற்றோம். அந்த உழைப்பின் பலனாக இப்போது நாங்கள் இவ்வுலகமே வியக்கும் வண்ணம் சன்மானம் பெறுகிறோம். கைவளையல்கள், வங்கி எனப்படும் தோள் வளைகள், தோடு, செவிப்பூ, கால்களில் பாடகம் எனும் கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து எங்களை அலங்கரித்துக் கொள்வோம். புதிய ஆடையுடுத்துவோம். பிறகு பாலிலேயே சோறு வடித்து, அதில் வாசனையான நெய்யை பெய்து, அந்த நெய் முழங்கையில் வழியுமாறு வளமான உணவு உண்போம். எங்களுடன் நீயும் சேர்ந்து, மேலும் அனைத்து அடியார்களும் சேர்ந்து இந்த கொண்டாட்டத்தில் கலந்து ஒன்றாக உணவு உண்டு, ஒன்று கூடி குளிர்ந்திருப்போம்! இவ்வாறு உன்னுடன் சேர்ந்து பாவை நோன்பை முடிக்க வந்துள்ளோம். அதற்கு நீ அருள்வாயாக!
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாத்தோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்
பொருள்:
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளுகின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமைகளாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக!
குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்
No comments:
Post a Comment