Monday, January 10, 2011

திருப்பாவை - 26, திருவெம்பாவை - 16

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 26

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலாயார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமாலவா! நீல வண்ண கண்ணா! எமது குலப்பெரியோர்கள் எங்களுக்கு கற்பித்த வகையிலே நாங்கள் மார்கழி நீராட்டை தொடர்கிறோம். எங்களது நோன்புக்குத் தேவையான ஆறு பொருட்களை அளித்தருள வேண்டும் கண்ணா!

பால் நிறமுடைய, இவ்வுலகெல்லாம் அதிரும்படி ஒலியெழுப்பும் வல்லமை பொருந்திய உனது பாஞ்சசன்னிய சங்கைப் போன்ற வெண்சங்குகள் வேண்டும், உன்னைப் புகழ்ந்து பாடிட, பெரிய பறை வாத்தியங்கள் வேண்டும், உன்னைப் போற்றி பல்லாண்டு பாடும் அடியார்கள் வேண்டும், அழகிய மங்கல விளக்குகளும், கொடியும், பந்தலும், ஆலிலையில் அமர்ந்திருக்கும் கண்ணா, எங்களுக்கு கருணை கூர்ந்து வழங்குவாயாக! இவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் நோன்பினை செவ்வனே முடிக்க அருள்வாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்


பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து, எம்மை உடையாளாகிய அம்மை உமாதேவியனது திருமேனி போல் நீல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல் மின்னி விளங்கி, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல் சிலம்பி, அவளது திருப்புருவம் போல் வானில் வானவில் விட்டு, நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான், அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும் தனது திருவுளம் கொண்டு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையை பொழிவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment