Sunday, January 2, 2011

திருப்பாவை - 17, திருவெம்பாவை - 7

நண்பர்களே,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இரு தினங்களாக பதிவிட முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். எனவே இன்று இரு பதிவுகளை இட உள்ளேன்.

நன்றி
வர்தினி.

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
     எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
     எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
உடுக்க ஆடை, பருக நீர், உண்ண உணவு ஆகிய எம் தேவைகள் அனைத்தையும் எமக்கு தானமாக வாரி வழங்கும் எங்கள் தலைவரே! நந்தகோபரே! கண்ணனின் தந்தையே! உறக்கத்தினின்று எழுந்திருங்கள். வஞ்சிக்கொடி போன்ற இடையுடைய ஆயக்குலத்துப் பெண்களுக்கெல்லாம் தலைவியும் குலவிளக்குமாக விளங்கும் யசோதை பெருமாட்டியே! எழுந்தருளுங்கள். முதலில் வாமனனாக வந்து பிறகு வானளாவி வளர்ந்து திரிவிக்கிரமனாக உலகத்தையே தன் திருவடியால் அளந்த தேவர்க்கெல்லாம் தேவனாக விளங்கும் கண்ணபிரானே! துயில்கொள்ளாமல் எழுந்திடுவாய்! செம்பொன்னாலான வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளையுடைய செல்வனே, பலதேவா (பலராமா)! நீயும் உனது தம்பியான கண்ணனும் உறங்காது எழுந்திருங்கள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 7

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியன் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லாமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னேத் துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்


பொருள்:
பெண்ணே! யாம் இதுவரை கூறியவை கொஞ்சமோ? தேவர்கள் பலராலும் நினைத்துப் பார்க்கவும் அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழுமுடையவன் நம் இறைவன். அத்தகைய பெருமானுக்காக முழங்கும் இசைக் கருவிகளின் ஒலியை கேட்டதுமே சிவசிவ என்று சொல்லியே வாய் திறப்பாயே! தென்னா என்று அவன் பெயரை துவங்கும்போதே தீயிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகுவாயே! இன்று உனக்கு நேர்ந்தது என்ன? எமது பெருந்துணைவன், எமது அரசன், இனிய அமுதன் என்றெல்லாம் நாங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடியதை கேட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே? கொடிய மனமுடையவளைப் போல் வாளாவிருக்கிறாயே? உறக்கத்தின் தன்மையைத்தான் என்னவென்று சொல்ல?


குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment