ஆண்டாள் அருளிய திருப்பாவை – 30
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்
பொருள்:
மனமெனும் கப்பல்கள் சென்று அடையும் திருப்பாற்கடலில், மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பை கயிறாக்கி, கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையின் அடியிலே நின்று முட்டுக் கொடுத்து பாற்கடலை கடைந்த மாதவனை, கேசவனை, ஸ்ரீமந்நாராயணனை, நிலவையொத்த அழகிய முகமுடைய பெண்கள், அடியார்களுடன் கூட்டமாகச் சென்று வணங்கி தாங்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட பறையை அடையும் வழியை விளக்கிக் கூறி, அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூரின், குளிர்ச்சியான தாமரை மாலைகள் அணிந்த, சூடிக் கொடுத்த சுடர்கொடியாம் பட்டர்பிரான் பெரியாழ்வாரின் செல்வமகளாகிய கோதை பாடிக் கொடுத்த இந்த சங்கத்தமிழ் மாலையின் முப்பது பாசுரங்களைத் தவறாமல் நாளும் பாடி, இறைவனை சேவிப்பவர்கள், நான்கு பெரும் மலைகளைப் போன்ற தோள்களை உடையவனும், செவ்வரியோடிய கண்கள் கொண்டவனும், திவ்யமான திருமுகமுடையவனும், திருமகளுடன் இணைந்து இருப்பவனுமாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருவருளைப் பெற்று பேரானந்தத்தை அடைவர்.
ஆண்டாள் திருநாமம் வாழி
திருவாடிப் புரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே
ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்!!!
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்!
பொருள்:
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.
திருச்சிற்றம்பலம்
நண்பர்களே,
இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் நமது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி - தினமும் ஒரு பாடல் எனும் தொடர் நிறைவுக்கு வருகிறது. மிகுந்த தயக்கம் தோன்றியபோதும், சிறு வயதிலிருந்தே பாடிய இந்தப் பாடல்களை, அதன் பொருளை, அறிந்துக் கொள்ள தக்கதொரு சந்தர்ப்பமாக எண்ணியே இந்தத் தொடர் பதிவினை துவங்கினேன். அந்த சர்வேச்வரனாகிய இறைவனின் கருணையால், ஏதோ நான் படித்ததையும், கேட்டதையும் வைத்து இந்தத் தொடரினை எழுதி இன்று நிறைவு செய்கிறேன். இதில் பிழையேதும் இருக்குமானால், அனைவரும் அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள். மார்கழி எனும் தெய்வீக மாதத்தில் இறைவனை நாம் வழிபட்டு வந்தோமானால், அதன்பொருட்டு இறைவன் அகமகிழ்ந்து தை பிறந்ததும் நமது துன்பங்கள் நீங்க நல்வழிகாட்டுவான் என்பதை இதற்கான விளக்கமாக பெரியோர் கூறுவர். அவ்வாறே உங்கள் அனைவரின் வாழ்விலும் இந்தத் தை மாதம் நல்வழி பிறக்கும் மாதமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கூடிய விரைவில் மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
வர்தினி.