Saturday, December 18, 2010

திருப்பாவை - 4, திருப்பள்ளியெழுச்சி - 4

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்:
கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே! கடலுள் சென்று, கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே ஏறு! ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள்! பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு! இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு! அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல, இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழிவாயாக!

குறிப்பு: இந்தப் பாடலில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு சிறப்பும் உள்ளது. இறைவனைப் போற்றி பாடி மெய்ஞ்ஞானத்துக்கு வழிகாட்டுவதோடு, மழை எவ்வாறு பொழிகிறது என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் ஆண்டாள் தருகிறார். ஆஹா! நம் முன்னோர்களின் சிறப்பே சிறப்பு! பலவாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பாடல்களின் மூலம் பல்வேறு விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் ஆட்கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையையுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில் இருக்க, வேதங்களோடு தோத்திரம் இயம்புவோர் ஒரு பக்கத்தில்; நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தியிருப்போர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை உடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக!


குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

4 comments:

  1. வர்த்தினி,
    பெருமாளின் சாரங்க வில்லைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  2. ஐயா,

    பெருமாளின் கையில் தரித்திருக்கும் ஆயுதங்களாவன, கதை, சார்ங்கம் எனும் வில், பாஞ்சசன்னியம் எனும் சங்கு, சுதர்சனம் எனும் சக்கரம், வாள் ஆகியன. விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில்

    "வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ
    ஸ்ரீமந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோ (அ)பிரஷது"

    என்று வருகிறது.

    மேலும் ஆண்டாள் சார்ங்கம் எனும் வில்லைப் பற்றி கூறும் போது, "தாழாதே சார்ங்கமுதைத்த சரமழை போல்" என்கிறார். ஸ்ரீராமனின் சார்ங்கமாகிய வில்லிலிருந்து புறப்படக்கூடிய எண்ணற்ற அம்புகளை போல், சிறந்த மழை பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார். இருப்பினும் அந்த அம்புகள் இராவணன் மற்றும் அரக்கர்களை அழித்தது போல் மழையும் பூமியை அழித்துவிடாது இருக்கவே, உடனடியாக "வாழ உலகினில் பெய்திடாய்" என்றும் பாடுகிறார். இவ்வையகம் வாழும் வகையாய் மழையை பொழிந்திடுவாயாக என்றும் வேண்டுகிறார்.

    கும்பகோணத்தில் சார்ங்கபாணி திருக்கோயிலில் பெருமாள் சார்ங்கம் எனும் வில்லை ஏந்தி சார்ங்கபாணியாக காட்சி தருகிறார்.

    நான் அறிந்தவரையில் விளக்கியுள்ளேன்.

    நன்றி
    வர்தினி

    ReplyDelete
  3. Very nice - I liked the explanation of the rains, too. Truly our ancestors knew the scientific reason for everything.

    ReplyDelete