Monday, December 27, 2010

திருப்பாவை - 12, திருவெம்பாவை - 2

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கி னியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
இளங்கன்றினை ஈன்ற எருமைகள், தங்கள் கன்றினை நினைத்து அவற்றுக்குப் பாலைப் பொழிவதாக எண்ணிக்கொண்டு தானே, பாலைப் பொழிய, அந்நேரத்தில் அருகில் வேறெவரும் இல்லாத காரணத்தால், பால் பெருகி இல்லம் முழுவதும் நனைந்து சேறாகிவிடக்கூடிய வளம் மிக்க பெருஞ்செல்வனின் தங்கையே!

மார்கழி மாதத்தின் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாசலில் நின்று, மிகுந்த கோபம் கொண்டு இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்தவனும், நம் மனதிற்கெல்லாம் இனியவனுமாகிய இராமபிரானைப் புகழ்ந்து நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இதைக் கேட்டு எங்களுடன் சேர்ந்து நீயும் பாடுவாயாக! நீ இன்னுமா எழவில்லை? அக்கம்பக்கத்தில் உள்ளோர் அனைவரும் நீ உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ளுவார்கள். எனவே சீக்கிரம் எழுந்து எங்களுடன் பாவை நோன்பிருக்க வருவாய் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் ராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
     கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
     ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: சிறந்த அணிகளை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும்போது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கே என்று கூறுவாய், இப்பொழுது உனது படுக்கைக்கே உனது அன்பை வைத்தாயோ?

தூங்குபவள்: பெண்களே! சீ சீ! சிறிது நேரம் உறங்கியதற்காக நீங்கள் பேசும் நகை மொழிகள் கொஞ்சமோ? விளையாடி ஏசிக் கொள்ள தக்க சமயம் இது தானா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலையை எண்ணி கூச்சப்படும்படி உள்ளன அப்பெருமானுடைய மலர்ப் போன்ற திருவடிகள். ஒளிமயமாக விளங்கும் அந்தத் திருவடிகள் மண்ணில்படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த கூத்தாடும் நாயகன். அவனுக்கே அன்பு செய்யும் அடிமைகள் நாம். அவனது புகழைப் பாட விரைந்து எழுந்து வருவாய் பெண்ணே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

1 comment:

  1. வர்த்தின் இந்தப் பாடலின் உள் அர்த்தம் புரியவில்லை அம்மணி
    அன்புள்ள டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete