Wednesday, December 22, 2010

திருப்பாவை - 8, திருப்பள்ளியெழுச்சி - 8

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 8

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
     மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
     கூவுவான் வந்துநின்றோம் கோதுகல முடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
     ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
கிழக்கிலே வானம் வெளுத்து விட்டது! எருமை மாடுகள் எல்லாம் பனி படர்ந்த சிறு புல்வெளியில் மேயத் தொடங்கிவிட்டன. பாவை நோன்பை முதற்கடமையாகக் கொண்டு கிளம்பிய மற்ற பெண்களையும் தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்து அழைத்தவண்ணம் இருக்கிறோம். குதூகலம் நிறைந்த பெண்ணே! ஹரி ஹரி என்ற நாமத்தைப் பாடிக் கொண்டே எழுந்திராய். குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அரக்கன் கேசியின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்ஸன் ஏவிய மல்லர்களான சாணூரன், முஷ்டிகன் ஆகியோரை அழித்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனுமாகிய நம் கண்ணனை நாம் வணங்கினால், நம்மைக் கண்டதும் ஆவென்று மனமிரங்கி, நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க விரைந்து வாராய் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 8

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
    மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
    பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
    திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்? இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே! நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியின் காட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பதிகத்தில்)

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

1 comment:

  1. சிறிய பாடலில் எத்தனை சம்பவங்கள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. கதை எழுதும் பொழுது இது போன்ற பல சம்பவங்களை மாலை போல கோர்த்து நன்றாக அமையும் போல
    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete