Wednesday, December 15, 2010

திருப்பாவை - 1, திருப்பள்ளியெழுச்சி - 1

நண்பர்களே, 

அனைவரும் நலம் தானே? மார்கழி மாதம் என்றாலே விடியற்காலையிலேயே எழுந்து, வாசலில் அழகிய கோலமிட்டு, நீராடி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையையும், சமயக்குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியையும் பாராயணம் செய்து, திருக்கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது நமது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. 

அத்தகைய திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றிலிருந்து நாளொரு பாடலாக, அதாவது திருப்பாவையிலிருந்து ஒரு பாடலும், திருவெம்பாவை/திருப்பள்ளியெழுச்சியிலிருந்து ஒரு பாடலும் என தினமும் பதிவு செய்வதே இந்த இடுகையின் நோக்கம். இது உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி
வர்தினி

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
மார்கழி மாதத்தின் மதி நிறைந்த சிறந்த நாளாகிய இன்று, அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களே, மார்கழி நீராடுவோம் வாரீர். அழகும் செல்வமும் நிறைந்திருக்கும் ஆயர்ப்பாடியின் சிறுமிகளே! நம் கண்ணன் கூர்மையான வேலை ஏந்தி பகைவர்களை வெல்லும் நந்தகோபரின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய மேகத்தைப் போன்ற மேனியுடையவன், செந்தாமரையை போன்ற கண்களையுடையவன், குளிர்ந்த ஒளிதரும் முழுமதியைப் போன்ற முகமுடையவன். அந்த ஸ்ரீ நாராயணன் நமக்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான். அவன் பெயரைச் சொல்லி உலகிலுள்ளோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோமாக!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 1

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
    புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை


11 comments:

 1. அன்புள்ள சகோதரி பி.எம்,
  தாங்கள் செய்வது மிக அருமையான காரியம். தாங்கள் சொன்ன பாடலும் அதனுடன் இணைக்கப்பட்ட படமும் மிகவும் அருமை.
  ஆனால்

  ”கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்”

  என்ற வரியின் பொருள் விளங்கவில்லை.
  கண்ணன் எப்படி கொடுந்தொழில் செய்பவனின் குமரனாக இருக்க முடியும்.
  சிறிது விளக்கினால் நலம்
  தங்கள் அன்புள்ள,
  டாக்டர் எல். கைலாசம்

  ReplyDelete
 2. @Dr. Kailasam sir:
  ஐயா,

  இந்த வரிக்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது, கூர்மையான வேல் கொண்டு பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன் என்பதாகும். இரண்டாவது, கூர்மையான வேல் தாங்கி நம் பாவங்களை அழிக்கும் இறைவன் நம் கண்ணன், அவன் நந்தகோபனின் திருக்குமரன் என்பதாகும். நான் அறிந்த வரையில் விளக்க முயன்றுள்ளேன். பிழையிருப்பின் மன்னிக்கவும்.

  நன்றி
  வர்தினி

  ReplyDelete
 3. Varthini, Kurvel Kodunthozhilan can also be interpretted as "Just as a cowherd guiding his cows, the Almighty also guides us". The Kurvel is seldom used by Him. But the purpose is to correct and guide.

  Another query, why is it that Palli yezhutchi is said only in the Month of Marghazhi and not in any other months. I know the saying that God said "Maathangalil Naan Marghazhi" but there has to be something more to it for its specific sanctity. Do elaborate on that as well.

  ReplyDelete
 4. பகைவர்களை அழிப்பதும், பாவங்களை அழிப்பதும் எப்படி வர்த்தின் அன்னையே கொடுங்தொழிலாக இருக்க முடியும்??

  டாக்டர் எல். கைலாசம்

  ReplyDelete
 5. ஐயா,

  கொடுந்தொழிலன் என்பது 'கடினமான பணிசெய்பவன்' என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. பகைவர்களை அழிக்கும் கடினமான பணி செய்யும் நந்தகோபன்; மக்களின் பாவங்களை அழிக்கும் கடினமான பணி செய்யும் கண்ணன் என்பதாக அறியப்படுகிறது.

  நன்றி
  வர்தினி

  ReplyDelete
 6. @Raji Mam: Thank you :-))

  @Manjula: Sure Manju. Will post on it too.

  ReplyDelete
 7. Very Nice PV. To Manjula's query, Margazhi is s'posed to be early morning (dawn) for the Devas & hence Tirupalliezhuchi. Our one year is s'posed to be one day for Devas. This is what I've gathered may be there are other reasons too.
  Shobha

  ReplyDelete
 8. @Shobha Mam: Thank you very much :-)))

  ReplyDelete