Thursday, December 30, 2010

திருப்பாவை - 16, திருவெம்பாவை - 6

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 16

நாயகனாய் நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாயிற்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
அனைத்துப் பெண்களும் துயில் நீக்கி, மார்கழி நீராடி, கண்ணனின் அரண்மனையை அடைந்து விட்ட பின்னர் பாடும் பாடல்

நம் தலைவனாகிய நந்தகோபாலன் எழுந்தருளியுள்ள அரண்மனையைக் காப்பவனே! அழகிய மலர்களால் கொடிகள் கட்டப்பட்ட தோரண வாயிலின் காவலனே! மணிகள் பதித்த கதவுகளின் தாழ் திறந்திடுங்கள். ஆயர்பாடி சிறுமியரான எமக்கு, மாயன், கருநீல நிறமுடைய மணிவண்ணன், நேற்றே நோன்புக்கான பறை தருவதாக வாக்களித்துள்ளான். கண்ணனின் துயில் நீக்க தூய்மையாக வந்திருக்கிறோம். எங்கள் நோன்பின் ஆரம்பமாக மாளிகைக்கு வந்திருக்கும் எங்களுக்காக மறுப்பேதும் கூறாமல் தாழ் அகற்றி, திருக்கதவுகளை திறந்து, நாங்கள் கண்ணனை வழிபட அனுமதியளியுங்கள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 6

மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
மான் போன்ற கண்களையுடைய பெண்ணே! நேற்று எங்களிடம், நானே நாளை வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிவிட்டு சிறிதும் வெட்கமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறாயே? நீ கூறிய சொற்கள் எந்தத் திசையில் போயிற்று என்று கூறு. இன்னமும் பொழுது விடியவில்லையோ? வானுலகத்தில் வாழும் தேவர்களும், நிலவுலகில் வாழும் மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவன்களும், மேலும் பிற உலகத்தினரும் அறிவதற்கு அருமையான எம்பெருமானின் திருவடிகள் தானாகவே வலிய வந்து நம்மை ஆட்கொள்பவை. அத்தகைய நெடிய கழலணிந்த திருவடிகளை மனமுருக பாடி வந்த எங்களிடம் நீ வாய் திறந்து பேசாதிருக்கிறாய். உனது உடலும் உருகவில்லை. இந்நிலை உனக்கே பொருந்தும். நம் அனைவருக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை எழுந்து வந்து பாடுவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Wednesday, December 29, 2010

திருப்பாவை - 15, திருவெம்பாவை - 5

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
     வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
     எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
     வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: அடியே, கிளி போல் மொழிபேசும் பெண்ணே! இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே

உள்ளே இருப்பவள்: சில்லென்று கூச்சலிட்டு என்னை அழைக்காதீர்கள். இதோ வருகிறேன்

எழுப்புபவள்: ஆஹா உன் சாமர்த்திய பேச்சுத்திறனை நாங்கள் முன்பே அறிவோம்

உள்ளே இருப்பவள்: நீங்கள் தான் பேச்சுத்திறனுடையவர்கள். உங்கள் தேவைக்கேற்ப என்னைச் சொல்கிறீர்கள்

எழுப்புபவள்: என்ன செய்கிறாய்? சீக்கிரம் எழுந்து வா

உள்ளே இருப்பவள்: நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டனரா?

எழுப்புபவள்: அனைவரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். கம்ஸன் ஏவிய வலிமை பொருந்திய யானையை கொன்றவனும், பகைவர்களின் தவறான செய்கைகளையும் அகந்தையை அழிப்பவனுமாகிய மாயக்கண்ணனின் பெருமைகளை புகழ்ந்து பாட விரைவில் எங்களுடன் வாராய்!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 5

மாலாறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
     ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமால் அறிய முடியாத, நான்முகன் காண முடியாத அருட்பெரும் அண்ணாமலையை நாம் அறிந்திட முடியும் என்று பிறர் நம்பும்படி பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகி, வாயிற்கதவை திறப்பாயாக! இந்த பூவுலகினரும், வானுலகினரும் மற்றும் பிற உலகினரும் அறிவதற்கு அருமையானவனாகிய நம் இறைவனின் அழகையும் நம்மை ஆட்கொண்டருளி குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடி சிவனே சிவனே என்று உள்ளம் உருக உரக்கப் பாடுகின்றோம். அதையும் நீ அறியாது உறக்கம் நீங்காது இருக்கிறாய், மணம் பொருந்திய கூந்தல் உடையவளே, இதுதான் உனது தன்மை போலும்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Tuesday, December 28, 2010

திருப்பாவை - 14, திருவெம்பாவை - 4

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 14

உங்கள் புக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
     பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்தும், அல்லி மலர்கள் இதழ்கள் குவிந்தும் உள்ளன. இதிலிருந்தே விடிந்துவிட்டதை நீ அறிந்துகொள்ளவில்லையா? செந்நிற காவியுடை அணிந்த தூய்மையான உள்ளமுடைய முனிவர்கள், சங்கை முழக்கிக்கொண்டே நம் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு செல்கின்றனர். எங்களுக்கு முன்னதாக எழுந்து, எங்களையும் எழுப்புவதாக வாக்களித்துவிட்டு இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாயே பெண்ணே! நாணமற்றவளே! இனிமையாக துடுக்காக பேசும் பெண்ணே! சங்கு சக்கரம் தரித்த கைகளையுடைய தாமரைக் கண்ணனைப் போற்றி பாடுவோம். விரைந்து எழுந்து வாராய்!மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
     வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
     கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
     கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
     எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்: கிளி போல மொழி பேசும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவள்: எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் புகழ்ந்து பாடி மனம் கசிந்து உள்ளம் நெகிழ்ந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய் உறங்குவாயாக.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Monday, December 27, 2010

திருப்பாவை - 13, திருவெம்பாவை - 3

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் முறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்றவனும், இலங்கை வேந்தன் இராவணின் பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து மாய்த்தவனுமாகிய எம் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டே, மற்ற பெண்கள் அனைவரும் பாவை நோன்பிருக்கும் இடம் நோக்கி சென்று விட்டனர். வண்டு மேயும் மலர்ப் போன்ற கண்களை உடையவளே! மனமும் உடலும் குளிர பொய்கையில் உள்ள குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல், இவ்வாறு உறங்கலாமா? இந்த நன்னாளில் உறங்குவது போன்று கள்ளமான பாவனை செய்வதை விட்டு, எங்களுடன் கலந்து வா கண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
     அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
     பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
     எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
     இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து என் அப்பனே! ஆனந்தனே! அமுதம் போன்றவனே என்று இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய்.

உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடத்தில் பேரன்புடையவர்கள். இறைவனது பழைய அடியார்கள். அவனைப் புகழும் முறையை அறிந்தவர்கள். நானோ புதிய அடிமை. உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவள்: உன்னுடைய அன்புடைமை உண்மையானது என்று எங்களுக்குத் தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். மனம் செம்மையுடையவர்கள் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

திருப்பாவை - 12, திருவெம்பாவை - 2

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கி னியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
இளங்கன்றினை ஈன்ற எருமைகள், தங்கள் கன்றினை நினைத்து அவற்றுக்குப் பாலைப் பொழிவதாக எண்ணிக்கொண்டு தானே, பாலைப் பொழிய, அந்நேரத்தில் அருகில் வேறெவரும் இல்லாத காரணத்தால், பால் பெருகி இல்லம் முழுவதும் நனைந்து சேறாகிவிடக்கூடிய வளம் மிக்க பெருஞ்செல்வனின் தங்கையே!

மார்கழி மாதத்தின் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாசலில் நின்று, மிகுந்த கோபம் கொண்டு இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்தவனும், நம் மனதிற்கெல்லாம் இனியவனுமாகிய இராமபிரானைப் புகழ்ந்து நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இதைக் கேட்டு எங்களுடன் சேர்ந்து நீயும் பாடுவாயாக! நீ இன்னுமா எழவில்லை? அக்கம்பக்கத்தில் உள்ளோர் அனைவரும் நீ உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ளுவார்கள். எனவே சீக்கிரம் எழுந்து எங்களுடன் பாவை நோன்பிருக்க வருவாய் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் ராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
     கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
     ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: சிறந்த அணிகளை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும்போது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கே என்று கூறுவாய், இப்பொழுது உனது படுக்கைக்கே உனது அன்பை வைத்தாயோ?

தூங்குபவள்: பெண்களே! சீ சீ! சிறிது நேரம் உறங்கியதற்காக நீங்கள் பேசும் நகை மொழிகள் கொஞ்சமோ? விளையாடி ஏசிக் கொள்ள தக்க சமயம் இது தானா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலையை எண்ணி கூச்சப்படும்படி உள்ளன அப்பெருமானுடைய மலர்ப் போன்ற திருவடிகள். ஒளிமயமாக விளங்கும் அந்தத் திருவடிகள் மண்ணில்படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த கூத்தாடும் நாயகன். அவனுக்கே அன்பு செய்யும் அடிமைகள் நாம். அவனது புகழைப் பாட விரைந்து எழுந்து வருவாய் பெண்ணே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Saturday, December 25, 2010

திருப்பாவை - 11, திருவெம்பாவை - 1

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 11

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு றங்கும் பொருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், புனிதமான அந்த கறவைகளைப் போற்றாமல் அவைகளுக்குக் கொடுமை செய்யும் பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர்புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத கோவலர்கள் (கோ-காவலர்கள் - இடையர்கள்) குலத்தில் தோன்றிய பொற்கொடியே! புற்றில் இருந்து வெளிவரும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் உடையவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களைப் போற்றி பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணே, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 1

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
     சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
     மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
     போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
     ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்!

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.


பொருள்:
 
திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற, வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Friday, December 24, 2010

திருப்பாவை - 10, திருப்பள்ளியெழுச்சி - 10

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
     தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்


பொருள்:
பாவை நோன்பிருந்து வைகுந்தம் அடையப் போகின்ற அம்மையே! நாங்கள் இத்தனை முறை அழைத்தும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய்? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், அவனை நாம் பாட, நமக்கு அவன் பேரின்பத்தை நல்குவான். முன்னொரு காலத்தில் புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை, உறக்கத்தில் உன்னை மிஞ்சமுடியாமல் தோற்றுப்போய் உன்னிடம் தந்துவிட்டு சென்றானோ? எல்லையில்லாச் சோம்பல் உடையவளே! எங்களுக்கு பெறுவதற்கரிய ஆபரணம் போன்றவளே! விரைவாக வந்து கதவைத் திறப்பாயாக!


மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 10

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
    போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
    திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
    படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!


திருச்சிற்றம்பலம்

நண்பர்களே,

மொத்தம் பத்துப் பாடல்களைக் கொண்ட, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் ஆண்டாள் அருளிய திருப்பாவையுடன் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை பதிவில் காணலாம்.

நன்றி
வர்தினி

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Thursday, December 23, 2010

திருப்பாவை - 9, திருப்பள்ளியெழுச்சி - 9

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
     தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
     மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்


பொருள்:
மாசற்ற மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, அகில் மற்றும் சம்பிராணி போன்ற நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமி! உறங்கும் தங்கள் மகளை எழுப்ப மாட்டீரா? அவள் என்ன ஊமையோ, செவிடோ, செருக்கினால் உண்டான சோம்பல் மிக்கவளோ? அல்லது, ஏதேனும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு உறங்குகிறாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு அழைத்துச் செல்ல “திருமகளின் நாயகனே, மாதவா, வைகுந்தா” என்றெல்லாம் நம் பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்லுவோம்.

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
    விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
    வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
    கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!

பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்ளே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே! உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை