Friday, January 7, 2011

திருப்பாவை - 24, திருவெம்பாவை - 14

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 24

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய்எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
திரிவிக்கிரமனாக வந்து இப்பூவுலகை ஓரடியால் அளந்த பெருமாளே, உன் திருவடிகளை போற்றி வணங்குகின்றோம். தென் இலங்கைக்குச் சென்று இராவணாதி அசுரர்களை அழித்தவனே, உனது வலிமையையும் திறமையையும் போற்றி வணங்குகின்றோம். வண்டிச்சக்கர உருவில் வந்த சகடாசுரனை உன் காலால் உதைத்து அழித்தவனே, உனது புகழைப் போற்றி வணங்குகின்றோம். கன்று உருவத்தில் வந்த வத்சாசுரனையே, விளாங்கனிமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, உன் வீரக்கழல்களை போற்றி வணங்குகின்றோம். கோவர்த்தனகிரியை குடைபோல் தாங்கி பெருமழையிலிருந்து ஆயர்பாடியைக் காத்தவனே, மேன்மைமிக்க உனது குணநலன்களை போற்றி வணங்குகின்றோம். பகைவர்களை வெல்லும் உனது திருக்கரங்களில் உள்ள வேலைப் போற்றி வணங்குகின்றோம். என்றென்றும் உனது அடியவராகி உனக்கு சேவை செய்து வணங்கி வழிபட நோன்பிருக்க புறப்பட்டு வந்துள்ளோம். எங்களைக் கண்டு மனம் இரங்கி அருள்புரிவாய் கண்ணா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்


பொருள்:
செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும்பொன்னாலான அணிகலன்கள் ஆட, கருங்கூந்தாலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டினங்கள் ஆட, இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப்பொருளாகிய சிவபெருமானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடி, பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் திருமுடியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி, அவனது ஆதியான தன்மையைப் பாடி, அவனே அந்தமுமாக விளங்கும் முறையைப் பாடி, ஏனைய உயிர்களிலிருந்து நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல்நிலையில் எடுத்தருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த சிவகாமி அம்மை ஆகியோரின் திருவடிகளை புகழ்ந்து பாடிக்கொண்டே நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Thursday, January 6, 2011

திருப்பாவை - 23, திருவெம்பாவை - 13

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 23

மாரி மலைமு
ழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
மழைக்காலத்தில், மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, உறக்கம் கலைந்து, தீப் பொறி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, கழுத்தை சிலுப்பி, உடலை உதறி, சோம்பல் நீங்க நெட்டி முறித்து, நீண்ட முழக்கம் செய்து கம்பீரமாக புறப்படுவது போல, காயா மலர் போன்ற கருமை நிறக் கண்ணா! நீயும் சிம்மகதியில் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து உனக்கேற்ற பெருமைமிகு சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் உனை நாடி வந்த காரியத்தை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாய் மாதவா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 13

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்ப சிலம்புக் கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
பசுமையான குவளையின் கருமையான மலர்களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

திருப்பாவை - 22, திருவெம்பாவை - 12

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
பெருமாளே! அழகிய பரந்த இவ்வுலகத்தின் அரசர்கள் தமது ஆணவமும் தற்பெருமையும் அழிக்கப்பட்டு உனது பஞ்சணைக்குக் கீழே வந்து உன்னடியில் காத்திருக்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம். சலங்கை போன்று சற்றே வாய் பிளந்திருக்கும் செந்தாமரை மலர்களை ஒத்த, பாதி திறந்தும் திறவாமலும் இருக்கும் உனது கண்களை முழுமையாகத் திறந்து எம்மை பாராய் கண்ணா! வெப்பம் தரும் சூரியனும், குளிர்ந்த சந்திரனும் போன்ற இரு விழிகளால் எங்களை நோக்குவாயாக. அதன் மூலம் எங்கள் பாபங்களும் சாபங்களும் அனைத்தும் அகன்றுவிடும்.


மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய்


பொருள்:
நம்மைப் பிணித்த பிறவித்துன்பம் ஒழியும்படி நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லை சிற்றம்பலத்தில் ஞான சபையில் தனது இடக்கரத்திலே அனலை ஏந்தி நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற கூத்தபிரான். விண்ணுலகத்தையும் இந்நிலவுலகத்தையும் மற்றும் சகல பிரம்மாண்டத்தையும், நம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். அப்பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலின் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரைகள் பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொற்பாதங்களை துதித்து பெரிய மலைச் சுனை நீரில் நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Wednesday, January 5, 2011

திருப்பாவை - 21, திருவெம்பாவை - 11

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 21

ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு! உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரேன்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்


பொருள்:
அக்கினி போன்ற சிவந்த நிறமுடையவனே! வெண்ணிற திருநீற்றினால் உடல் முழுவதும் மூழ்கப் பெற்றவனே! ஈசனே! உடுக்கை போன்ற சிறிய இடையினையும் மைதீட்டிய அகன்ற பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே!

உனது பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் முகேர் என்று ஒலி எழும்படியாக புகுந்து, கைகளால் குடைந்து குடைந்து, குளிர்ந்த நீரில் நீராடி வீரக் கழலணிந்த உனது திருவடிகளைப் புகழ்ந்துப் பாடி வருகின்றோம். எங்கள் தலைவனே! நீ ஆட்கொள்ளும் திருவிளையாட்டினால் துன்பத்தினின்று நீங்கி இன்பத்தைப் பெற்ற அடியார்கள் செல்லும் நெறியில் நாங்களும் செல்கின்றோம். இனி எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டுகிறோம் எம்பெருமானே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Tuesday, January 4, 2011

திருப்பாவை - 20, திருவெம்பாவை - 10

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்


பொருள்:
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், இடர்கள் நெருங்குவதற்கு முன்பே, அவர்களின் அச்சத்தை விலக்கி காத்தருளும் கண்ணா! நேர்மையானவனே! திறமையானவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! பகைவருக்கு துன்பமளிப்பவனே! பரந்தாமா, விழித்தெழுக!

செம்பைப் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த இதழ்களையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழுவாயாக. எங்கள் நோன்பிற்கு தேவையான விசிறியையும், கண்ணாடியையும் அளித்து உன் கணவனை, மலர்க் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார்ப் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமாலும் நான்முகனும் காண முடியாத அனற்பிழம்பாக நின்ற அண்ணாமலையாரின் வீரக் கழலணிந்த மலர்ப்பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை மலர், சந்திரன், கங்கை ஆகியவற்றை அணிந்த அவரது திருமுடியோ மேலோருக்கும் மேலாக அண்டங்களைக் கடந்து விளங்குகிறது. அவன் ஒரே வகையானவன் அல்லன். ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன். வேதமுதலாக, விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற உயிர்த்துணைவன். அத்தன்மையுடைய சிவபெருமானின் ஆலயத்திலுள்ள குற்றமில்லாத குலத்தையுடைய பணிப்பெண்களே! அவனது ஊர் யாது? பெயர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் வகை யாது? அன்புடன் எமக்குக் கூறுவீர்களா?

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

திருப்பாவை - 19, திருவெம்பாவை - 9

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்


பொருள்:
சுற்றிலும் குத்து விளக்குகள் எரிய, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலின் மீது, மெத்து மெத்தென்று இருக்கும் அழகிய பஞ்சு மெத்தையில் வாசம் மிகுந்த கொத்துகொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து கொண்டு உறங்கும், நறுமண மலர்மாலையை சூடியுள்ள கண்ணா. உன் திருவாய் மலர்ந்து பேசுவாயாக. மையிட்ட கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் உறக்கம் கரைந்துவிடக்கூடாது என்று உறங்கும் கண்ணனை எழுப்ப உனக்கு மனமில்லையா? ஒரு நொடிப் பொழுதும் அவனது பிரிவை தாங்க இயலாதவளாக இருக்கிறாயே. நீ இப்படிச் செய்வது நியாயமன்று. உன் இயல்புக்கும் தயாளகுணத்திற்கும் தகுந்ததன்று. எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலாமேலோ ரெம்பாவாய்


பொருள்:
(பெண்கள் அனைவரும் சேர்ந்து பாடுகின்றனர்)

எம்பெருமானே! முன்னரே தோன்றிய பழமையான பொருட்களுக்கும்  முற்பட்ட பழமையான பொருளே! பின்னர் தோன்றிய புதிய பொருட்களுக்கெல்லாம் புதுமையாகத் தோன்றும் தன்மையனே!

உன்னை இறைவனாக பெற்ற உன் சிறப்பு மிக்க அடியவர்களாகிய நாங்கள் உனது தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம். அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலேயே அடிமைப் பணி செய்வோம்.

எங்கள் பெருமானே! எங்களுக்கு இவ்வகையான வாழ்க்கை நீங்கள் அருள் புரிவீர்களானால் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாவோம்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Sunday, January 2, 2011

திருப்பாவை - 18, திருவெம்பாவை - 8

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
மதயானை போன்ற நடையுடையவனும், போரில் பகைவரைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமையுடையவனுமாகிய நந்தகோபாலனின் மருமகளே நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலுடையவளே! கதவைத் திறவாய்! பொழுது விடிந்து கோழிகள் பலவும் கூவுகின்றன. செண்பகக் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தல் மீது அமர்ந்து பல குயில்கள் கீதம் பாடுகின்றன. மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மெல்லிய விரல்களை உடையவளே! உன் கணவன் கண்ணனின் திருநாமங்களை உன்னுடன் சேர்ந்து போற்றிப் பாட வந்துள்ளோம். செந்தாமரையை ஒத்த உனது கரங்களில் வளையல்கள் கலகலவென ஒலியெழுப்ப மகிழ்ச்சியுடன் வந்து கதவை திறப்பாயாக!



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
நற்காலைப் பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; வாத்தியங்களின் ஏழிசை நாதம் இசைக்க, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. ஒப்பற்ற மேலான கருணையுடைய சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.

அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக்காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்