Monday, December 20, 2010

திருப்பாவை - 6, திருப்பள்ளியெழுச்சி - 6

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
பெண்ணே, பறவைகள் கூவத் தொடங்கிவிட்டன; பறவைகளின் அரசன் கருடனின் இறைவனாகிய நம் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் இனிய ஓசை உன் காதில் விழவில்லையா? பெண்ணே எழுந்திரு. பூதகி எனும் அரக்கியின் முலையில் நஞ்சு கலந்த பாலைக் குடித்து அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவில் வந்த சகடாசுரன் என்ற அரக்கனை தன் காலால் உதைத்து வதம் செய்ய தன் திருவடிகளை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், இவ்வுலகிற்கே வித்தாக, ஆதிமூலமாக இருப்பவனும் ஆகிய பரந்தாமனை தம் சிந்தையில் இருத்தி, தவமுனிவர்களும் யோகிகளும் நிதானமாக “ஹரி ஹரி” எனும் நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டான பேரோசை நம் உள்ளத்தில் புகுந்து உவகையளிக்கிறது. அத்தகைய மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
    பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
    வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
உமையம்மையின் மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Sunday, December 19, 2010

மார்கழி திங்களல்லவா...

மார்கழி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் மிளிரும் அழகிய கோலங்கள். மேலும், பிற மாதங்களை விட சற்று முன்னதாகவே நடை திறக்கப்படும் கோவில்கள், விடியற்காலையிலேயே குளித்து, பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடும் பெண்கள், வயது வித்தியாசமின்றி, கோவிலுக்கு வழிபட செல்லும் மக்கள் என மார்கழி துவங்கியதுமே ஊரெங்கும் ஒரு தெய்வீகக்களை தோன்றிவிடுகிறது. 


இறைவனை கண்டு விழிகளின் பசி தீரும், இனிய பாடல்களை கேட்டு செவிகளின் பசி தீரும், அதோடு சுடச்சுட கிடைக்கும் அருட்பிரசாதம் வயிற்றின் பசியை தீர்க்கும். 


பன்னிரெண்டு மாதங்களில் மார்கழிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு என்று சில நேரங்களில் தோன்றுவதுண்டு. அதனை அறிந்து கொள்ளும் முயற்சியின் விளைவே இந்தப் பதிவு.

மார்கழியின் சிறப்பு:

மார்கழி மாதம் தேவர் மாதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடவுளை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், மாதங்களில் தான் மார்கழி என அருளுகிறார்.

“ப்ருஹத்ஸாம் ததா சாம்னாம் காயத்ரீ ச்சந்தஸாமஹம்
மாஸானாம் மார்கஷீர்ஷோ(அ)ஹம்ருதூனாம் குஸுமாகர:”
(அத்தியாயம் 10 – ஸ்லோகம் 35)


மேலும் இந்த மார்கழி மாதத்தில் தான் அனுமத் ஜெயந்தியும், வைணவ திருத்தலங்களின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியும், சைவ திருத்தலங்களின் முக்கிய விழாவான திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

வைணவ திருக்கோவில்களில் சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவையும், சிவாலயங்களில் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் இம்மாதத்தில் பாடப்படுகிறது. 


மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பிருப்பர். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழியமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்யப்படுகிறதல்லவா? இதன் காரணமாகவும் இப்பழமொழி வழக்கில் வந்திருக்குமோ?

மார்கழி பீடை மாதமா?

மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் மற்றும் இதர மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் பொருட்டு மார்கழி பீடை மாதம் என்கிற தவறான அபிப்பிராயமும் மக்களிடையே உள்ளது. ஆனால் அது உண்மையன்று. மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது; சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது. 


அதிகாலையிலேயே எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவதால், நாடி நரம்புகள் வலுவடைகின்றன. நீண்ட ஆயுளும் சித்திக்கிறது. மேலும் தியானம், ஆன்மிகம், வழிபாடு என்று மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும் பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே தான் உலக வழக்கங்களுக்காக இல்லாமல், இறைவனை வழிபடவென்றே மார்கழி மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

குதூகலமான நாட்கள்:

மார்கழி என்றால் வீதிக்கு வீதி நடக்கும் கோலப் போட்டிகள், பனிவிழும் விடியற்காலை, கோவிலில் கிடைக்கும் புளியோதரையும் சுண்டலும் (எதை மறந்தாலும் இதை மறக்கவே முடியாது!!!), குழந்தைகளுக்கு கிடைக்கும் அரையாண்டு பள்ளி விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்,  பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி, என நமது விருப்பப் பட்டியல் நீண்டு கொண்டே போவதென்னமோ உண்மை தானே!!


படங்கள் மற்றும் தகவல்கள் உபயம்: இணையம்

திருப்பாவை - 5, திருப்பள்ளியெழுச்சி - 5

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.


பொருள்:
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடைய மாயவனும், வடமதுராவின் குலக்கொழுந்தும், பரிசுத்தமான பெரும் நதியாகிய யமுனைத் துறையில் வசிப்பவனும், ஆயர் குலத்தில் தோன்றிய மங்காத விளக்கும், தன்னுடைய அன்னையின் திருவயிற்றை விளங்கச் செய்து மாபெரும் புகழ் அளித்தவனுமாகிய தாமோதரனை, தூய்மையான உடல் மற்றும் உள்ளத்துடன் வந்து, அவனது திருவடிகளில் தூய்மையான மலர்களை தூவி வழிபட்டு, அவனது குணங்களைப் போற்றி பாடி, மனத்தில் எப்போதும் அவனை சிந்தித்து தியானித்தோமேயாயின், நாம் முன்னர் அறிந்து செய்த பாவங்களும், வருங்காலத்தில் அறியாது செய்யவிருக்கும் பாவங்களும், தீயில் இட்ட தூசு போல அழிந்துவிடும். ஆகவே, அவனது திருநாமங்களைச் சொல்லி நோன்பிருப்போம், வாரீர் பெண்களே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.  


பொருள்:
குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே! நினைத்ததற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டு அருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப் பாடல்களைப் பாடுவதும், ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர, உன்னை நேரே பார்த்து அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Saturday, December 18, 2010

திருப்பாவை - 4, திருப்பள்ளியெழுச்சி - 4

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்:
கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே! கடலுள் சென்று, கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே ஏறு! ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள்! பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு! இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு! அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல, இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழிவாயாக!

குறிப்பு: இந்தப் பாடலில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு சிறப்பும் உள்ளது. இறைவனைப் போற்றி பாடி மெய்ஞ்ஞானத்துக்கு வழிகாட்டுவதோடு, மழை எவ்வாறு பொழிகிறது என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் ஆண்டாள் தருகிறார். ஆஹா! நம் முன்னோர்களின் சிறப்பே சிறப்பு! பலவாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பாடல்களின் மூலம் பல்வேறு விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் ஆட்கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையையுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில் இருக்க, வேதங்களோடு தோத்திரம் இயம்புவோர் ஒரு பக்கத்தில்; நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தியிருப்போர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை உடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக!


குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Friday, December 17, 2010

திருப்பாவை - 3, திருப்பள்ளியெழுச்சி - 3

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்:
வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமனாகிய திருமாலின் திருநாமங்களைப்  பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்னவென்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க, தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் பயிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர்நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய றுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத்தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் என அறிந்து கொள் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 3

கூவின பூங்குயில் கூவின கோழி
    குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
    தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன், சிறந்த வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Thursday, December 16, 2010

திருப்பாவை - 2, திருப்பள்ளியெழுச்சி - 2

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெ ழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் நல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்! திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை எப்போதும் பாடுவோம். நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோன்பை கடைப்பிடிப்போம்.

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
    அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
    கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
    அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.  


பொருள்:
பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந்திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

Wednesday, December 15, 2010

திருப்பாவை - 1, திருப்பள்ளியெழுச்சி - 1

நண்பர்களே, 

அனைவரும் நலம் தானே? மார்கழி மாதம் என்றாலே விடியற்காலையிலேயே எழுந்து, வாசலில் அழகிய கோலமிட்டு, நீராடி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையையும், சமயக்குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியையும் பாராயணம் செய்து, திருக்கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது நமது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. 

அத்தகைய திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றிலிருந்து நாளொரு பாடலாக, அதாவது திருப்பாவையிலிருந்து ஒரு பாடலும், திருவெம்பாவை/திருப்பள்ளியெழுச்சியிலிருந்து ஒரு பாடலும் என தினமும் பதிவு செய்வதே இந்த இடுகையின் நோக்கம். இது உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி
வர்தினி

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
மார்கழி மாதத்தின் மதி நிறைந்த சிறந்த நாளாகிய இன்று, அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களே, மார்கழி நீராடுவோம் வாரீர். அழகும் செல்வமும் நிறைந்திருக்கும் ஆயர்ப்பாடியின் சிறுமிகளே! நம் கண்ணன் கூர்மையான வேலை ஏந்தி பகைவர்களை வெல்லும் நந்தகோபரின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய மேகத்தைப் போன்ற மேனியுடையவன், செந்தாமரையை போன்ற கண்களையுடையவன், குளிர்ந்த ஒளிதரும் முழுமதியைப் போன்ற முகமுடையவன். அந்த ஸ்ரீ நாராயணன் நமக்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான். அவன் பெயரைச் சொல்லி உலகிலுள்ளோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோமாக!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 1

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
    புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை