Thursday, October 17, 2019

நல்லதோர் வீணை செய்தே...

குழந்தைகளே!

ஆம். இன்று பொன்னியின் செல்வியாக அல்ல, ஒரு தாயின் ஸ்தானத்தில் பேச விழைகிறேன்.

நாம் ஒவ்வொருவருமே கனவுலகத்தில் வாழ்கிறோம். கனவை நிஜமாக்க துடிக்கிறோம். முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் அடைகிறோம். ஆனால், சில நேரங்களில், ஏன், பல நேரங்களில் நம் கனவுகள் நிறைவேறுவதில்லை. சிதைந்தும் போகக் கூடும். அப்படி நேர்ந்தால், சிறிது நேரம் எடுத்துக்கொள், குலுங்கி அழ. ஆனால் மறுபடி உன் கனவை சீர்தூக்கிப் பார். அல்லது வேறொரு கனவை தேர்வு செய். அதனை நோக்கி பயணத்தை மேற்கொள். 

வாழ்க்கை ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். இந்த மிக ப்ரஹ்மாண்டமான அண்டத்தில் ஒரு சிறிய இடம் நமக்கும் இருக்கிறது என்பதே எத்தனை பெரிய அற்புதம். பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குரிய நோக்கம் ஒன்று உண்டு. நோக்கமின்றி கடவுள் யாரையும் படைப்பதில்லை. 

வீழ்வது தவறல்ல; திரும்ப எழ மறுப்பதே தவறு.

நாம் விரும்பும் கதாநாயகர்கள் எல்லாரும் தைரியசாலிகள். வீழ்ச்சியிலும் வாழ வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள். அவர்களிடம் நாம் கற்க வேண்டியது என்ன? கற்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். திட வைராக்கியம். மனோ தைரியம். 

எத்தனை படித்தும், எத்தனை சாதித்தும், எத்தனை புகழ் அடைந்தும் என்ன பயன்? எதையும் தாங்கும் மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர் அல்லவா? 

இயற்கை நமக்கு தரும் அறிவுரை என்ன? பூகம்பமே வந்தாலும், பூமி தன் கடமை தவறுவதில்லை. தான் சுற்ற வேண்டிய பாதையில் சரியான நேரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பாய்ந்து வரும் நதி, வழியில் இடர் இருந்தால் தாண்டிச் செல்கிறது. மலை இருந்தால் பாதை மாற்றி வளைந்து செல்கிறது. ஏனெனில் அதற்குத் தெரியும் தேங்கி நின்றால் அதன் வாழ்வே முடிந்ததென்று. 

நம் வாழ்க்கையும் அப்படித் தான். ஒன்று கிடைத்தால், அடுத்ததை தேடிச் செல்லும் மனம். அதுவே இயற்கை. அப்படி விரும்பியது கிடைக்காவிட்டால், அடுத்த பயணத்தை மேற்கொள். வாழ்க்கையில் எதுவுமே நிற்பதில்லை. அனைத்தும் கடந்தே போகும். இதை அறிந்தால், நீ கலங்க மாட்டாய். தவறான முடிவுகளைத் தேட மாட்டாய்.

உணர்ச்சிவசப்பட்டு நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவும் உன்னை மட்டுமல்ல உன்னை சேர்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை அறிய மாட்டாயா. அத்துணை சுயநலமா?

பெற்றோராக கலங்கி போயிருக்கிறோம். நீ கற்ற கல்வி உன் ஆன்ம பலத்தை வளர்க்கவில்லையே என்று. உங்களது திறமைகளை வீணாக்குகிறீர்களே என்று. உலகையே வென்று நீங்கள் முடிசூட எங்களுக்கு ஆசை இல்லை. ஆனால், எங்கள் முடிவு காலம் வரை உங்களை சந்தோஷமாக காண மட்டுமே ஆசை.

நல்லதோர் வீணை செய்தே அதை 
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ. 
சொல்லடி சிவசக்தி!

தவறான முடிவெடுக்க நீங்கள் கொண்ட தைரியத்தில் பத்தில் ஒரு பங்கேனும் வாழ்க்கையில் போராட கையாண்டிருக்கலாமே என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

மற்றுமொரு தாயாரின் மனவேதனையை கண்டு கலங்கிப் போயிருக்கிறோம். 

உன் வாழ்க்கை உன் கையில் என்பது உண்மை; ஆனால், உன்னை சேர்ந்தோர் வாழ்க்கையும் உன் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதே.

பெற்றோருக்கும் ஒரு  வேண்டுகோள் உண்டு. பிள்ளைகளுக்கு எதை ஊட்டுகிறீர்களோ இல்லையோ, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுங்கள். எல்லா சூழ்நிலைக்கும் ஒரு நல்ல தீர்வும், முடிவும் உண்டு என புரிய வையுங்கள். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் தவறாகவே முடியும் என சொல்லிக்கொடுங்கள்.

வாழ்க்கையேப் போர்க்களம் 
வாழ்ந்து தான் பார்க்கணும் 

(அறிந்து கொண்ட ஒரு இழப்புச் செய்தியின் தாக்கத்தினால் ஒரு பதிவு)