அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றுதான் புதிய பதிவிட நேரம் வாய்த்திருக்கிறது.
தீபாவளி என்பதே தீபத்திருநாள் ஆகும். 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளியாகும். இந்தப் பண்டிகையன்று புத்தாடை உடுத்தி இனிப்புகளை அக்கம்பக்கத்தினருடன் பங்கிட்டு உண்டு பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி வருகிறோம்.
பொதுவாக நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று அறிகிறோம். ஆனால் யார் இந்த நரகாசுரன்? இவன் செய்த தீமைகள் என்ன? என்று அறிந்துக் கொள்ள முற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு.
வராக மூர்த்தி |
ஹிரண்யாட்சன் என்கிற அரக்கன் பூமியைக் கடலுக்குள் மறைத்து வைக்க, அவனை அழித்து பூமியைக் காக்கிறார் வராக அவதாரமெடுத்த மஹாவிஷ்ணு. அச்சமயம் பூமாதேவிக்கும் வராகமூர்த்திக்கும் மகனாகப் பிறந்தவன் பெளமன். வளர்ந்து பெரியவனான பெளமன், தவம் பல இயற்றி, பற்பல வரங்களைப் பெறுகிறான். பெளமாசுரன் என்றும் நரகாசுரன் என்றும் பெயர் பெற்ற இவ்வரக்கன் தன் தாயின் கரத்தால் மட்டுமே தான் மடியவேண்டுமென்றும் வேறெவ்விதத்திலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாதென்றும் வரங்களைப் பெறுகிறான்.
பற்பல வரங்களைப் பெற்று மிகுந்த சக்திசாலியாகும் ஏனைய அரக்கர்கள் போலவே நரகாசுரனும் மானுடருக்கும், ரிஷி முனிவர்களுக்கும், யக்ஷ கந்தர்வர்களுக்கும் இடர்பல செய்கிறான். தேவர்களையும் தேவர்களின் அதிபதியான இந்திரனையும் கொடுமைக்கு ஆளாக்குகிறான். தன் பாபத்தின் உச்சக்கட்டமாக 16000 பெண்களைக் கடத்தி வந்து சிறையில் அடைக்கிறான்.
நரகாசுரன் எனும் பெளமாசுரன் |
இவனது தொந்தரவுகளையும் கொடுமைகளையும் பொறுக்கமாட்டாது தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர், தான் கிருஷ்ணாவதாரம் எடுக்கும்போது நரகாசுரனுக்கு முடிவு கட்டுவதாக வாக்களிக்கிறார். கிருஷ்ணாவதாரத்தின் போது நரகாசுரன் தேவர்களின் அன்னையாகிய தாய் அதிதியின் காதணிகளைக் கவர்ந்து செல்கிறான். இந்தச் செய்தியையும் 16000 பெண்களை அவன் சிறை வைத்துள்ள செய்தியையும் செவியுற்ற சத்யபாமா மிகுந்த கோபம் கொண்டு கண்ணனிடம் முறையிடுகிறாள். எனவே கிருஷ்ணரும் சத்யபாமாவும் கருடவாகனத்திலேறி நரகாசுரனுடன் யுத்தம் செய்ய வருகிறார்கள்.
நரகாசுரனின் கோட்டை கொத்தளங்களை அழித்து, எதிர்க்க வந்த முராசுரன் மற்றும் அவனது ஏழு குமாரர்கள் தாம்ரன், அந்தரிக்ஷன், சிரவணன், விபாவசு, வசு, நபஸ்வான், அருணன் ஆகியோரையும், பீடா என்கிற அசுரனையும் வெற்றிக் கொள்கிறார் கிருஷ்ணர். முராசுரனை அழித்ததால் கண்ணனுக்கு முராரி என்ற பெயர் வழங்கலாயிற்று.
தன்னுடைய படைத்தளபதிகளை கிருஷ்ணர் சம்ஹாரம் செய்ததை அறிந்து நரகாசுரன் போரிடத் துவங்கினான். தன் தாயைத் தவிர யார் கரத்தாலும் தனக்கு மரணமில்லை என்கிற வரத்தால் செருக்குண்டு கண்ணனுடன் அகங்காரத்துடன் போரிட்டான். இனியும் இவனை அழிக்கத் தாமதிக்கக்கூடாதென கிருஷ்ணர் தீர்மானித்தார்.
நரகாசுரனுடைய சேனைகளுடன் கிருஷ்ணரும் சத்யபாமாவும் போரிடுதல் |
நரகாசுரன் ஒரு சக்தி மிகுந்த அஸ்திரத்தை எய்யவும், தான் தாக்குண்டு மயக்கமடைந்தது போன்ற தோற்றத்தை கிருஷ்ணர் ஏற்படுத்தினார். உலகங்களையே இயக்கும் கண்ணனை மயக்கமுறச் செய்த நரகாசுரனைக் கண்டு சத்யபாமா கடுங்கோபம் கொண்டாள்.
நரகாசுரனை நேரடியாக போரில் சந்தித்தாள். பலம் பொருந்திய அஸ்திரத்தினால் நரகாசுரனை வீழ்த்தினாள். படுகாயமுற்று மண்ணில் வீழ்ந்த நரகாசுரன் இனி தான் பிழைக்க வழியில்லை என உணர்ந்தான். தன் தாயைத் தவிர வேறு யாரும் தன்னை வீழ்த்த முடியாது என்று எண்ணியிருக்க யாரோ ஒரு பெண் தன்னை கொல்ல முடிந்தது எப்படி என்று மனம் குழம்பினான்.
கண்ணன் அப்போது சத்யபாமா பூமாதேவியின் அவதாரம் என்பதைக் கூறவும் தன் அன்னையின் பாதாரவிந்தங்களைப் பணிந்து ஒரு வரம் கோரினான் நரகாசுரன். தான் இறந்த நாளில் மக்கள் அனைவரும் தீபங்கள் ஏற்றி ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். அவன் விரும்பிய வரத்தை சத்யபாமா உருவத்தில் இருந்த தாய் பூதேவி வழங்கினாள்.
இவ்வாறாக நரகாசுரனின் வேண்டுகோளின்படி தீபாவளியை தீப வரிசையுடன் கொண்டாடும் வழக்கமாயிற்று.
நரகாசுரன் எனும் பெளமாசுரனின் வதம் ஸ்ரீமத்பாகவதத்தில் இடம்பெறுகிறது. இருப்பினும் அவன் மாய்ந்த தினம் தீபாவளியாகக் கொண்டாடப்படுவது பற்றி செய்தி ஏதும் இல்லை.
இராமாயணத்தில் இராமன் இலங்கையையும் இராவணனையும் வெற்றிகொண்டு தனது 14 ஆண்டு வனவாசமும் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய நாளே தீபாவளி என வட இந்தியாவில் நம்பப்படுகிறது.
காரணம் வெவ்வேறாக இருப்பினும் தீமைகள் அழிந்து இருள் நீங்கி ஒளிபெறவும் நன்மைகள் பரவவும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி அமைந்திருப்பதென்னவோ உண்மைதானே!
நம் இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியர்கள் வாழும் இடங்களிலெல்லாம் இப்பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சமய வேறுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில் தீபங்களின் ஒளி வெள்ளத்தில் அன்பானவர்களின் அருகில்மூத்தோரின் வழியில் நன்மைகள் நிறைய எல்லாரும் எல்லா வளமும் பெற தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
படங்களுக்கு நன்றி:
http://ancientindians.net/gods/avatars-of-vishnu/varaha/
http://wayang.wordpress.com/2010/08/29/wayang-closed-up/boma-narakasura-1a/
http://en.wikipedia.org/wiki/Narakasura
http://paritosh-mananam.blogspot.com/2012/10/deepavali-joy.html