Saturday, January 8, 2011

திருப்பாவை - 25, திருவெம்பாவை - 15

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தருக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஓர் இரவுக்குள்ளாகவே, யாரும் அறியா வண்ணம் வசுதேவரால் கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த கண்ணா! உன்னை அழித்துவிட வேண்டும் என்ற கம்ஸனின் கேடு நிறைந்த தீய நோக்கத்தை பலனற்றதாகச் செய்து, அவனது உயிர்பிரியும் காலம் வரை, அவனது வயிற்றில் நெருப்பு போல் நின்று அச்சமளித்த பெருமாளே! உன்னையே அர்ச்சனை செய்து ஆராதித்து நோன்புக்கான பறை வேண்டி வந்தோம். எங்களை நீ ஆட்கொண்டாயானால், திருமகளுக்கு ஒப்பான உனது அழகையும், உனது பெருமைகளையும் பாடி, வருத்தங்கள் நீங்கி மகிழ்ந்து வாழ்ந்திடுவோம் மதுசூதனா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் எம்பெருமானே, சிவபெருமானே என்று வாய் ஓயாது கூறுகின்றாள், மற்றொரு சமயம் நமது மகாதேவனின் புகழை வாய் ஓயாது பேசுகின்றாள். இறைவனைப் பற்றி பேசுவதிலே மனம் மகிழ்ந்து இவளது விழிகள் கண்ணீரை அருவிப் போல் சுரக்கின்றன, மேலும் நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தன்னை மறந்து கிடக்கின்றாள். சிவபிரானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் சிவபெருமானின் பொருட்டு பித்தானவர்கள் தன்மை இவ்வாறு தான் போலும். இவ்வாறு நம்மை ஆட்கொள்ளும் ஞான உருவமாய் விளங்குபவனின் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் குதித்து மார்கழி நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

1 comment:

  1. அன்புத் தங்கையே, தங்களிடம் இருந்து வெகு நாட்களாக எந்த இலக்கிய பதிவும் பிளாக்கில் வரவில்லையே?
    அன்புடன்
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete