Sunday, December 19, 2010

திருப்பாவை - 5, திருப்பள்ளியெழுச்சி - 5

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.


பொருள்:
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடைய மாயவனும், வடமதுராவின் குலக்கொழுந்தும், பரிசுத்தமான பெரும் நதியாகிய யமுனைத் துறையில் வசிப்பவனும், ஆயர் குலத்தில் தோன்றிய மங்காத விளக்கும், தன்னுடைய அன்னையின் திருவயிற்றை விளங்கச் செய்து மாபெரும் புகழ் அளித்தவனுமாகிய தாமோதரனை, தூய்மையான உடல் மற்றும் உள்ளத்துடன் வந்து, அவனது திருவடிகளில் தூய்மையான மலர்களை தூவி வழிபட்டு, அவனது குணங்களைப் போற்றி பாடி, மனத்தில் எப்போதும் அவனை சிந்தித்து தியானித்தோமேயாயின், நாம் முன்னர் அறிந்து செய்த பாவங்களும், வருங்காலத்தில் அறியாது செய்யவிருக்கும் பாவங்களும், தீயில் இட்ட தூசு போல அழிந்துவிடும். ஆகவே, அவனது திருநாமங்களைச் சொல்லி நோன்பிருப்போம், வாரீர் பெண்களே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.  


பொருள்:
குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே! நினைத்ததற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டு அருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப் பாடல்களைப் பாடுவதும், ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர, உன்னை நேரே பார்த்து அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

2 comments:

 1. இந்தப் பாடலில் தாங்கள் ”அறிந்து செய்த பாவங்களும், வருங்காலத்தில் அறியாது செய்யவிருக்கும் பாவங்களும், தீயில் இட்ட தூசு போல அழிந்துவிடும்” என்கிறீர்கள்.
  குற்றவியலில் அறிந்து செய்தால் தான் குற்றம். அறியாது செய்யாத செயல்கள் குற்றமகாது. unintentional mistakes are not crimes unless it is negligent. அறியாது செய்யும் செயல்கள் குற்றமாக. ஆனால் மனசாட்சியின் படி பாவமாகும். மாயவனைக் கும்பிட்டால் அந்தப் பாவமும் போய் விடும் என்கிறீர்கள். மிகவும் அருமை வர்த்தின்
  நன்றி
  தங்கள் அன்புள்ள
  டாக்டர் எல். கைலாசம்

  ReplyDelete