Tuesday, December 28, 2010

திருப்பாவை - 14, திருவெம்பாவை - 4

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 14

உங்கள் புக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
     பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்தும், அல்லி மலர்கள் இதழ்கள் குவிந்தும் உள்ளன. இதிலிருந்தே விடிந்துவிட்டதை நீ அறிந்துகொள்ளவில்லையா? செந்நிற காவியுடை அணிந்த தூய்மையான உள்ளமுடைய முனிவர்கள், சங்கை முழக்கிக்கொண்டே நம் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு செல்கின்றனர். எங்களுக்கு முன்னதாக எழுந்து, எங்களையும் எழுப்புவதாக வாக்களித்துவிட்டு இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாயே பெண்ணே! நாணமற்றவளே! இனிமையாக துடுக்காக பேசும் பெண்ணே! சங்கு சக்கரம் தரித்த கைகளையுடைய தாமரைக் கண்ணனைப் போற்றி பாடுவோம். விரைந்து எழுந்து வாராய்!



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
     வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
     கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
     கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
     எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்: கிளி போல மொழி பேசும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவள்: எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் புகழ்ந்து பாடி மனம் கசிந்து உள்ளம் நெகிழ்ந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய் உறங்குவாயாக.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

2 comments:

  1. இந்தப் பாடலின் விளக்கம் காலை விடிவதையா? வாழ்க்கை விடிவடைவதையா?
    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete